Friday, 24 April 2020

கொரோனாவின் தாண்டவம்.

கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலகமே நடுங்கி நிற்கின்றது. ஒவ்வொரு மானிடனின் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது. ஊரடங்கு எனும் இக்காப்பு நடவடிக்கை நோயை கட்டுப்படுத்தினாலும் எங்களின் வயிற்றை காயவைக்கும் கருவியாக அமைகிறது. எத்தனையோ குடும்பங்கள் அன்றாடம் செய்யும் வேலையையும் அதன் வழியால் வரும் கூலியையும் வைத்தே வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றார்கள். அதற்கே தடை ஏற்படும் போது செய்வதறியாது நடுக்காட்டில் தொலைந்த குழந்தை போல தள்ளாடி கொண்டிருக்கின்றோம். சற்று கண்மூடுகையில் ‘பக்கத்து ஊரிலேயே வந்திடுச்சு’ எனும் தகவல் நித்திரையையும் சேர்த்து நிம்மதியையும் கலைத்து விட்டது. அது என்ன மனிதனை விழுங்கும் பிரம்மாண்டமான படைப்பா? ஒரு ஊருக்குள் வந்தால் ஒவ்வொருவரையும் நாசம் செய்துவிட்டு அடுத்து ஊருக்கு போகும் என்பதற்கு ஆனால் அவ்வாறே நிகழ்கிறது. வறுமையின் கொடுமையால் தாய்மார்கள் பேச்சை கேட்பதில்லை. பாதையில் எந்த மரக்கறிகாரன் சென்றாலும் அழைத்து விலை கேட்கின்றனர். வாழைப்பூ, ஈரப்பலா, வெள்ளரி என்று மலிவானதையெல்லாம் வாங்கி நெஞ்சோடு அணைத்து இன்று தம் குடும்பத்துக்கு பசியைப்போக்கலாம் என்று ஆனந்தப்படுகின்றனர். இதற்கு நேர்மாறாக வசதிபடைத்தவர்கள் சொகுசு வீடுகளில் வேண்டிய விரும்பிய உணவையும் வசதியையும் விடுமுறையாகவே கழித்து வருகின்றனர். யாரைத்தான் குற்றம் சொல்வது? இயற்கையையும் கடவுளையும் அவமதித்தால் ஒரு நாள் சீற்றம் கொள்ளத்தானே செய்யும். இந்த நோயானது பல கஸ்டங்களை தந்த அதே வேளை சில படிப்பினைகளையும் தந்துள்ளது. நவநாகரீக கலாசாரத்தை மறக்கடித்துள்ளது. பண்பாடுகளுடனும், சமூக விலகளுடனும், வீண்விரயத்தை தவிர்க்கவும், சுத்தத்தை பேணவும் என பல பாடங்களை கற்று தந்துள்ளது. படிக்காதவர்களை விடவும் படித்த முட்டாள்கள் தான் கல் நெஞ்சம் படைத்தவர்கள் என்பதை உறுதிசெய்யும் வகையில் ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று அவர்களின் பெருமையை உலகத்திற்கு காட்டுவதற்காகவே மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுகின்றனர். ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘இன்று இந்த மக்கள் தேவையானவர்களே தவிர பிச்சைக்காரர்கள் அல்ல’ வீட்டிலேயே இருப்பது கஸ்டம் தான். அது ஒரு வகையான மனச்சோர்வை உண்டாக்குகிறது. உணவு, வேலை, சலிப்பு தட்டும் போது உறக்கம் என்பதை தாண்டி ஒன்றுமே இல்லை என்ற நிலையில் உள்ளோம். கனவில் கூட மருத்துவர்களே வருகின்றனர். கண்கள் முழுதும் கலக்கம் பட்டிணியான வயிறு வலியுடன் பொலிஸிடம் அடிவாங்கினாலும் பரவாயில்லை என்று வேலைதேடி திரியும் தந்தைமார்கள் இன்று நினைக்கையில் கண்களில் நீர் ததும்புகிறது. இந்த கொரோனாவும் அதன் விளைவும் நமது உலக நியதியை மாற்றுவதாகவும் பொருளாதாரம் பற்றிய நமது கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அமைந்து விடக்கூடும். அது போல இந்த அடி மனித வரலாற்றை மீள திருத்தி எழுதுகின்ற மூன்றாம் உலகப்போராக அமைந்து விடலாம். அணுகுண்டால் முடியாததை அணு அளவில்லாத நீ அழகாய் செய்து முடித்தாய்! கொரோனாவே.... இதிலிருந்து மீள் எழுவோம்.

No comments:

Post a Comment

பாக்.வீரர்கள் 10 பேருக்கு கொரோனா; சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 10 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்...