Tuesday, 23 June 2020

பாக்.வீரர்கள் 10 பேருக்கு கொரோனா; சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 10 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து செல்லும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (ஜூலை-ஆகஸ்ட்) பங்கேற்கிறது. இதற்காக 29 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி தேர்வு செய்யப்பட்டது. இந்த வீரர்களுக்கு அவரவர் வீடுகளில் முதற்கட்டமாக கொரோனா சோதனை நடந்தது. இதில் இளம் வீரர்கள் Haider Ali(19), Haris Rauf(26) மற்றும் Shadab Khan(21) என மூன்று பேருக்கு கொரோனா இருப்பது தெரிய வந்தது. இதனிடையே நேற்று நடத்தப்பட்ட சோதனையில் Fakhar Zaman, Imran Khan, Kashif Bhatti, Mohammad Hafeez, Mohammad Hasnain, Mohammad Rizwan மற்றும் Wahab Riaz என மேலும் 7 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. தவிர உதவிப் பணியாளர் ஒருவருக்கும் நோய் தொற்று ஏற்பட்டது. முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் Shahid Afridi அவர்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறாக பல வீரர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதால் இது பாகிஸ்தான் ரசிகர்கள் மாத்திரமின்றி கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே லாகூரில் உள்ள வீரர்களிடம் நாளை இரண்டாவது கட்ட சோதனை நடக்கும். இதன் முடிவில் புதிய வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்படும். இதன் பின் பாகிஸ்தான் வீரர்கள் 28ம் திகதி இங்கிலாந்து கிளம்பிச் செல்ல உள்ளனர். அங்கு விமான நிலையத்தை அடைந்ததும் மறுபடியும் சோதனை செய்யப்படுவர். அடுத்தடுத்து முன்னணி வீரர்கள் உட்பட பலரும் கொரோனா பாதிப்புக்கு உள்ளானதால், இங்கிலாந்து தொடர் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. 
 -✍S.M.Niflan-

Friday, 24 April 2020

கொரோனாவின் தாண்டவம்.

கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலகமே நடுங்கி நிற்கின்றது. ஒவ்வொரு மானிடனின் இயல்பு வாழ்க்கையும் பாதித்துள்ளது. ஊரடங்கு எனும் இக்காப்பு நடவடிக்கை நோயை கட்டுப்படுத்தினாலும் எங்களின் வயிற்றை காயவைக்கும் கருவியாக அமைகிறது. எத்தனையோ குடும்பங்கள் அன்றாடம் செய்யும் வேலையையும் அதன் வழியால் வரும் கூலியையும் வைத்தே வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றார்கள். அதற்கே தடை ஏற்படும் போது செய்வதறியாது நடுக்காட்டில் தொலைந்த குழந்தை போல தள்ளாடி கொண்டிருக்கின்றோம். சற்று கண்மூடுகையில் ‘பக்கத்து ஊரிலேயே வந்திடுச்சு’ எனும் தகவல் நித்திரையையும் சேர்த்து நிம்மதியையும் கலைத்து விட்டது. அது என்ன மனிதனை விழுங்கும் பிரம்மாண்டமான படைப்பா? ஒரு ஊருக்குள் வந்தால் ஒவ்வொருவரையும் நாசம் செய்துவிட்டு அடுத்து ஊருக்கு போகும் என்பதற்கு ஆனால் அவ்வாறே நிகழ்கிறது. வறுமையின் கொடுமையால் தாய்மார்கள் பேச்சை கேட்பதில்லை. பாதையில் எந்த மரக்கறிகாரன் சென்றாலும் அழைத்து விலை கேட்கின்றனர். வாழைப்பூ, ஈரப்பலா, வெள்ளரி என்று மலிவானதையெல்லாம் வாங்கி நெஞ்சோடு அணைத்து இன்று தம் குடும்பத்துக்கு பசியைப்போக்கலாம் என்று ஆனந்தப்படுகின்றனர். இதற்கு நேர்மாறாக வசதிபடைத்தவர்கள் சொகுசு வீடுகளில் வேண்டிய விரும்பிய உணவையும் வசதியையும் விடுமுறையாகவே கழித்து வருகின்றனர். யாரைத்தான் குற்றம் சொல்வது? இயற்கையையும் கடவுளையும் அவமதித்தால் ஒரு நாள் சீற்றம் கொள்ளத்தானே செய்யும். இந்த நோயானது பல கஸ்டங்களை தந்த அதே வேளை சில படிப்பினைகளையும் தந்துள்ளது. நவநாகரீக கலாசாரத்தை மறக்கடித்துள்ளது. பண்பாடுகளுடனும், சமூக விலகளுடனும், வீண்விரயத்தை தவிர்க்கவும், சுத்தத்தை பேணவும் என பல பாடங்களை கற்று தந்துள்ளது. படிக்காதவர்களை விடவும் படித்த முட்டாள்கள் தான் கல் நெஞ்சம் படைத்தவர்கள் என்பதை உறுதிசெய்யும் வகையில் ஏழைகளுக்கு உதவுகிறோம் என்று அவர்களின் பெருமையை உலகத்திற்கு காட்டுவதற்காகவே மக்களை பிச்சைக்காரர்களாக மாற்றுகின்றனர். ஒன்றை மட்டும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ‘இன்று இந்த மக்கள் தேவையானவர்களே தவிர பிச்சைக்காரர்கள் அல்ல’ வீட்டிலேயே இருப்பது கஸ்டம் தான். அது ஒரு வகையான மனச்சோர்வை உண்டாக்குகிறது. உணவு, வேலை, சலிப்பு தட்டும் போது உறக்கம் என்பதை தாண்டி ஒன்றுமே இல்லை என்ற நிலையில் உள்ளோம். கனவில் கூட மருத்துவர்களே வருகின்றனர். கண்கள் முழுதும் கலக்கம் பட்டிணியான வயிறு வலியுடன் பொலிஸிடம் அடிவாங்கினாலும் பரவாயில்லை என்று வேலைதேடி திரியும் தந்தைமார்கள் இன்று நினைக்கையில் கண்களில் நீர் ததும்புகிறது. இந்த கொரோனாவும் அதன் விளைவும் நமது உலக நியதியை மாற்றுவதாகவும் பொருளாதாரம் பற்றிய நமது கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவும் அமைந்து விடக்கூடும். அது போல இந்த அடி மனித வரலாற்றை மீள திருத்தி எழுதுகின்ற மூன்றாம் உலகப்போராக அமைந்து விடலாம். அணுகுண்டால் முடியாததை அணு அளவில்லாத நீ அழகாய் செய்து முடித்தாய்! கொரோனாவே.... இதிலிருந்து மீள் எழுவோம்.

Wednesday, 8 January 2020

🇦🇺🔥அவுஸ்திரேலிய காட்டுத் தீயினால் 10,000 ஒட்டகங்­களை கொல்வதற்கு உத்த­ரவு🔥🐪

அவுஸ்திரேலியாவில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக காட்டுத் தீ வேக­மாகப் பரவி வருகின்ற நிலையில் முழு நாடுமே திண்டாட்டத்தை எதிர்கொண்­டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டிலுள்ள ஒட்டகங்கள் வரட்சியால் பாதிக்கப்பட்ட பிராந்தியங்­களில் அதிகளவு நீரை அருந்துவதைத் தடுத்து நிறுத்த அங்குள்ள 10,000 க்கு மேற்பட்ட ஒட்டகங்களைக் கொல்லும் நடவடி­க்கை இன்று புதன்கிழமை முதல் ஆரம்­பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அனன்கு பிட்ஜன்ட்ஜட்ஜாரா யன்குனிட்ஜட்­ஜாரா பிராந்தியத்தைச் சேர்ந்த உள்ளூர் தலைவர்கள் ஒட்டகங்களைக் கொல்வதற்கான இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இதற்காக உலங்குவானூர்திகளில் உத்தி­யோகபூர்வமாக துப்பாக்கிச் சூட்டை நடத்துபவர்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒட்டகங்களைக் கொல்லும் இந்த நடவ டிக்கை சுமார் 5 தினங்களுக்கு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

☀️சூரியனுக்கு மிக அருகில் பூமி!🌍 இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவித்தல்🇱🇰

தற்போதைய நாட்களில் பூமியானது சூரியனுக்கு அருகாமையில் பயணிப்பதாக இலங்கை வானியல் ஆய்வாளர் அனுர சீ பெரேரா தெரிவித்துள்ளார். இதனால், நாடு முழுவதும் மிகவும் வெப்பமான காலநிலை நிலவுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் காரணமாக அதிகளவில் நீர் அருந்துவதோடு, வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அவர் அறிவுறுத்தல் விடுத்துள்ளார். இதேவேளை இலங்கை இந்தியா உள்ளிட்ட நாடுகள் பூமியின் மத்திய கோட்டுக்கு அருகாமையில் இருப்பதால் சூரியனின் தாக்கம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Tuesday, 7 January 2020

🇺🇸அமெரிக்க படைவீரர்களை பயங்கரவாதிகளாக அறிவித்தது ஈரான்🇮🇷

ஈரான் இராணுவத் தளபதி அமெரிக்காவால் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அமெரிக்க படை வீரர்கள் அனைவரையும் ஈரான் அரசு பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது. அமெரிக்கா-ஈரான் இடையே ஆயுத தவிர்ப்பு விவகாரம், யுரேனியம் செறிவூட்டல், பொருளாதார தடைகள் போன்ற பல விவகாரங்கள் காரணமாக காரணமாக அசாதாரண சூழல் நிலவிவருகிறது. இதற்கிடையே கடந்த வெள்ளிக்கிழமை(03.01.2019) அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரானின் இரண்டாவது சக்தி வாய்ந்த மனிதரான இராணுவத்தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை பழி தீர்ப்போம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் இரு நாடுகள் இடையே போர் மூளும் அபாயம் நிலவுகின்றது. இந்நிலையில் ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டதை அடுத்து அனைத்து அமெரிக்க படைகள் மற்றும் இராணுவ ஊழியர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவிக்கும் சட்டமூலம் இன்று ஈரான் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதேவேளை வல்லரசு நாடுகளுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது. அணு ஆயுதங்களை அதிக அளவில் கையிருப்பு வைத்து பிற நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்த ஈரானுடன் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய 06 வல்லரசு நாடுகள் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தின. அணுசக்தி ஒப்பந்தம் என்று அழைக்கப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் படி ஈரான் தனது அணு ஆயுத கையிருப்பை படிப்படியாக குறைக்க வேண்டும் அதற்கு பிரதிபலனாக அந்த நாட்டின் மீது விதித்த பொருளாதாரத் தடைகளை மேற்கூறிய வல்லரசு நாடுகள் திரும்பப் பெற வேண்டும். ஈரானுடனான இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஆண்டு அறிவித்தார். மேலும் ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தார். இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் வெடித்தது அதனைத் தொடர்ந்து அணுசக்தி. அணுசக்தி ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை புறக்கணிப்பதாக ஈரான் படிப்படியாக அறிவித்து வந்தது. அதன் படி 5 நிபந்தனைகளில் 4 நிபந்தனைகளை நிராகரித்தது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே அமெரிக்க இராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதி கொல்லப்பட்டார். இதனால் தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் வலுவடைந்து போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Monday, 6 January 2020

🌃இரவு நேரத்தில் இறப்பைத் தவிர்க்கவும்!😴

இனியவர்களே! வீட்டை பரிசோதிக்கவோ, அல்லது சிறுநீர் கழிக்கவோ, இரவில் எழுந்திருக்கும் ஒவ்வொரு நபரும் மூன்றரை நிமிடங்கள் கவனிக்க வேண்டும். எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் ஒரு நாள் இரவில் திடீரென காலமானார். "அவர் ஏன் திடீரென்று இறந்தார்?" காரணம்......? நீங்கள் கழிப்பறைக்குச் செல்ல இரவில் எழுந்தவுடன், அது பெரும்பாலும் விரைவாக நடக்கும். நீங்கள் உடனடியாக படுக்கையில் இருந்து குதித்து எழும் போது, மூளைக்கு இரத்த ஓட்டம் இருக்காது. "மூன்றரை நிமிடங்கள்" ஏன் மிகவும் முக்கியம்? நள்ளிரவில், சிறுநீர் கழிக்கும் ஆசை உங்களை எழுப்பும்போது, ​​ திடீரென்று எழுந்ததன் மூலம், மூளை இரத்த சோகையாக இருக்கும், மேலும் இது இரத்தம் இல்லாததால் இதய செயலிழப்பை ஏற்படுத்துகிறது. மூன்று நிமிடங்கள் மற்றும் ஒன்றரை நிமிடங்கள் பயிற்சி செய்வது நல்லது, அவை யாதெனில்?: 1. நீங்கள் எழுந்ததும், ஒன்றரை நிமிடம் படுக்கையில் இருங்கள். 2. அடுத்த அரை நிமிடத்தில் படுக்கையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்; 3. உங்கள் கால்களைக் குறைத்து, படுக்கையின் விளிம்பில் அரை நிமிடம் உட்கார்ந்து கொள்ளுங்கள். மூன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, உங்கள் மூளை இனி இரத்த சோகைக்கு ஆளாகாது, உங்கள் இதயம் பலவீனமடையாது, இது வீழ்ச்சி மற்றும் திடீர் மரணம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். இதை உங்கள் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்பானவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வயதைப் பொருட்படுத்தாமல் இது நிகழலாம்.

Sunday, 5 January 2020

🌞2020 இல் செயற்கைச் சூரியன்🇨🇳

சீனாவின் புதிய முயற்சியான செயற்கை சூரியன் அடுத்த ஆண்டு தயாராகிவிடும் என கூறப்படுகிறது. புதுமையான முயற்சிகளை எடுப்பதில் சீன நாட்டினர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் செயற்கை மழை, செயற்கை நிலவு என்ற வரிசையில் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கிளவுட் சீடிங் எனப்படும் மேக விதைத்தல் முறையில்தான் இது போன்ற புதுமைகள் உருவாக்கப்படும். இதற்கான முயற்சியை சீன நாட்டை சேர்ந்த நேஷனல் நியூக்ளியர் கார்பரேஷனில் பணியாற்றி வரும் அறிவியல் அறிஞர்கள் செயற்கை சூரியனை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் Experimental Advanced Superconducting Tokamak என்ற இயந்திரத்தை உருவாக்கும் பணியில் சீனா ஈடுபட்டு வருகிறது. இந்த பணி தற்போது முடிவடையும் நிலையிலுள்ளது. இரு ஹைட்ரஜன் அணுக்களை இணைப்பதன் மூலம் மிகப் பெரிய ஆற்றலை உற்பத்தி செய்யும் நிகழ்வு அணுக்கரு இணைவு ஆகும். இதனால்தான் சூரியனில் ஒளியும் வெப்பமும் ஒரே நேரத்தில் வெளியேறுகிறது. அணுக்கரு இணைவை செயற்கையாக உருவாக்கும் வகையில் செயற்கை சூரியன் அமையும். டோக்காமாக் ரியாக்டர் என்ற பெயரில் அணுக்கரு உலையை சீனர்கள் உருவாக்கி அணுக்கரு இணைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இந்த அணுக்கரு இணைப்பு எவ்வளவு நேரம் இருக்கிறதோ அதுவரை சூரியனும் ஒளிரும். பொதுவாக சூரியனின் வெப்பநிலை 15 மில்லியன் டிகிரி செல்சியஸாக இருக்கும். ஆனால் செயற்கை சூரியனின் வெப்பநிலையோ 100 மில்லியன் டிகிரி செல்சியஸாக இருக்கும். HL- 2M Tokomak என இந்த செயற்கை சூரியனுக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த சூரியன் 2020-ஆம் ஆண்டு ஒளிரும் என சீன அறிவியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் 2006-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. சூடான பிளாஸ்மாவை தக்க வைக்க சக்திவாய்ந்த காந்தப்புலமே டோகோமாக் கருவியாகும். இந்த செயற்கை சூரியனில் இந்த கருவி பயன்படுத்தப்படுவதால் டோகோமாக் என பெயரிடப்பட்டுள்ளது.

டெங்கு நோயாளர்களுக்காக அனைத்து வைத்திய சாலைகளிலும் தனியான வைத்தியர் நியமனம்🌟

டெங்கு நோயாளர்களின் இரத்தப் பரிசோதனைக்காக இயந்திரம் வழங்குவதற்கும் அதற்காக தனியான வைத்தியர் ஒருவரை நியமிப்பதற்கும் சுகாதார அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. டெங்கு நோய் பெருமளவில் காணப்படும் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தற்பொழுது இவ்வாறான இயந்திரம் ஒன்று வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார். நோயாளி டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக நோயாளியின் முழுமையான இரத்தப் பரிசோதனை ( Full Blood Count ) மேற்கொள்ளப்பட வேண்டும். பெரும்பாலான வைத்திய சாலைகளில் இதற்கான வசதிகள் இல்லை. இதனால் நோயாளர்களின் பாதுகாவலர்கள் வெளி இடங்களில் உள்ள இரசாயன கூடங்களில் பெருந்தொகை பணத்தை செலுத்தி இவ்வாறான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நிலைமைகளைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் அனைத்து பிரதான வைத்திய சாலைகளுக்கும் இந்த இயந்திரத்தை வழங்கவுள்ளது. 20 நிமிடத்தில் இதன்மூலம் பரிசோதனை தொடர்பான பெறுபேற்றை பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.

Wednesday, 1 January 2020

யார் இந்த குர்துக்கள்???






யார் இந்த குர்துக்கள்???

துருக்கி, இராக், சிரியா, இரான் மற்றும் ஆர்மீனியா எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். மத்திய கிழக்கில் நான்காவது பெரிய இனத்தவர்களாக அவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கென சொந்தமாக ஒரு நாடு இருந்தது கிடையாது.

அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?
இப்போது தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு இரான் மற்றும் தென்மேற்கு ஆர்மினியா பகுதிகளாக உள்ள மெசபடோமிய சமவெளி மற்றும் மேடான பகுதிகளைச் சேர்ந்த பூர்விக மக்களில் ஒரு இனத்தவர்களாக குர்து மக்கள் உள்ளனர்.

இப்போது அவர்கள் இனம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் ஒன்றுபட்ட தனி சமுதாயத்தினராக இருந்தாலும், இயல்பாகப் பயன்படுத்தும் பேச்சு மொழி எதுவும் கிடையாது. பெரும்பாலானவர்கள் சன்னி இஸ்லாமியர்களாக இருந்தாலும், வெவ்வேறு மதங்கள், நம்பிக்கைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.

அவர்களுக்கு ஏன் அரசு இல்லை?

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ``குர்திஸ்தான்'' என்று பொதுவாகக் குறிப்பிடும் - தாய் நாடு ஒன்றை உருவாக்க வேண்டும் என்று குர்து மக்கள் பலரும் யோசித்தனர். முதலாவது உலகப் போருக்குப் பிறகு, ஓட்டோமன் சாம்ராஜ்யம் வீழ்ந்த பிறகு, வெற்றி பெற்ற மேற்கத்திய கூட்டுப் படையினர் 1920 ஆம் ஆண்டு பிரான்ஸில் செவ்ரெஸில் கையெழுத்தான ஒப்பந்தத்தின்படி, குர்திஸ் அரசு உருவாக்குவதற்கு வழி வகுத்தனர்.

மூன்று ஆண்டுகள் கழித்து அந்த நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டன. நவீன துருக்கியின் எல்லைகளை வரையறுத்த லாவ்சன்னே ஒப்பந்தத்தின்படி, குர்திஸ் அரசுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை. தாங்கள் வாழும் நாடுகளில் குர்திஸ் மக்கள் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்பட்டனர். அடுத்த 80 ஆண்டுகளில், சுதந்திரமான அரசை உருவாக்க குர்துகள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும், கடுமையாக அடக்கப்பட்டன.

ஐ.எஸ்.-க்கு எதிரான போரில் குர்துகள் ஏன் முன்னணியில் இருந்தனர்?

2013 ஆம் ஆண்டின் மத்தியில், தனது கட்டுப்பாட்டில் வடக்கு சிரியாவில் இருந்த எல்லைக்குள் மூன்று குர்திஸ் வாழ்பகுதிகளை ஐ.எஸ். ஜிகாதி குழுவினர் குறி வைத்தனர். தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தினர். சிரிய குர்திஸ் ஜனநாயக ஐக்கிய கட்சியின் ஆயுதம் தாங்கிய மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளால் விரட்டப்படும் வரை அந்தத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

ஜூன் 2014ல் வடக்கு இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் முன்னேறியதும், அந்த நாட்டு குர்து மக்களைச் சர்ச்சைக்குள் இழுப்பதாக இருந்தது. இராக்கிய ராணுவத்தால் கைவிடப்பட்ட பகுதிகளுக்கு, தன்னாட்சி பெற்ற இராக்கில் குர்திஸ்தான் பிராந்தியத்தின் அரசாங்கம் தனது பெஷ்மெர்கா படைகளை அனுப்பியது.

ஆகஸ்ட் 2014-ல் ஜிகாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியதை அடுத்து பெஷ்மெர்கா படையினர் பல பகுதிகளிலிருந்து வாபஸ் ஆயினர். மத சிறுபான்மையினர் வசித்து வந்த பல நகரங்கள் வீழ்ந்துவிட்டன. குறிப்பாக சின்ஜரில், ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆயிரக்கணக்கான யசிடிகளை கொலை செய்தனர் அல்லது சிறை பிடித்தனர்.

அதற்குப் பதிலடியாக அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டுப் படைகள் விமானத் தாக்குதலை வடக்கு இராக்கில் நடத்தி, பெஷ்மெர்காவினருக்கு உதவி செய்வதற்காக தங்களின் ராணுவ ஆலோசகர்களை அனுப்பியது. மக்கள் பாதுகாப்புப் பிரிவுகளும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியும் (பி.கே.கே.) குர்திஷ் தன்னாட்சிக்காகத் துருக்கியில் மூன்று தசாப்தங்களாகப் போராடி வந்தன. இராக்கில் தளம் அமைத்திருந்த அவர்களும், உதவிக்கு வந்தனர்.

செப்டம்பர் 2014-ல் வடக்கு சிரியாவில் குர்திஷ்களின் கொபானே நகரின் மீது ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில், பல பத்தாயிரம் பேர் அருகில் உள்ள துருக்கிய எல்லைக்கு இடம் பெயர்ந்தனர். அருகிலேயே சண்டை நடந்தபோதிலும், ஐ.எஸ். தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தத் துருக்கி மறுத்துவிட்டது. தங்களைத் தற்காத்துக் கொள்ள எல்லை தாண்டிச் செல்ல துருக்கிய குர்திஷ்களுக்கும் அனுமதி தரவில்லை.

ஜனவரி 2015ல் குறைந்தது 1,600 பேர் கொல்லப்பட்ட சண்டைக்குப் பிறகு, கொபானே நகரை குர்திஷ் படைகள் மீண்டும் வசப்படுத்தின.

சிரிய ஜனநாயகப் படைகள் (எஸ்.டி.எப்.) கூட்டணி என்ற பெயரில் வந்த பல உள்ளூர் அரபு ராணுவப் பிரிவினருடன் சேர்ந்து, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினரின் விமானத் தாக்குதல்கள், ஆயுதம் மற்றும் ஆலோசனை உதவிகளுடன் - குர்து இனத்தவர்கள் போராடி வட கிழக்கு சிரியாவில் பல பத்தாயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகளை விரட்டியடித்து, துருக்கியுடனான எல்லையில் பெரும் பகுதியில் கட்டுப்பாட்டை நிர்மாணித்தனர்.

அக்டோபர் 2017-ல் எஸ்.டி.எப். வீரர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தலைமையிடமாகக் கருதப்பட்ட ரக்கா -வை கைப்பற்றி, தென்கிழக்கு பகுதியில் முன்னேறினர். ஜிகாதிகளின் கடைசி முக்கிய தளமாக இருந்த சிரியாவின் டெயிர் அல்-ஜவுர் மாகாணத்தை நோக்கி அவர்கள் முன்னேறிச் சென்றனர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் கடைசியாகப் பிடித்து வைத்திருந்த - பக்ஹோவ்ஜ் கிராமத்தை ஒட்டிய பகுதிகள் - மார்ச் 2019ல் எஸ்.டி.எப். வசம் வந்தன. ஐ.எஸ். `கலிபா'-வை `முழுமையாக அழித்துவிட்டதை' எஸ்.டி.எப். பெருமையுடன் அறிவித்தது. ஆனால், ஜிகாதிகளின் அமைதியாக இருக்கும் படைகள் உலகிற்கு ``பெரிய சவாலாக'' இருக்கும் என்று எச்சரித்தனர்.

கடந்த இரண்டு ஆண்டு கால போரில் சிறைபிடிக்கப்பட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்களையும், இடம் பெயர்ந்த பல பத்தாயிரம் பெண்கள் மற்றும் குழந்தைகளில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் தொடர்பு உள்ளவர்களையும் கையாளும் பொறுப்பு எஸ்.டி.எப். வசம் அளிக்கப்பட்டது. அவர்களில் வெளிநாட்டவர்களைத் தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. ஆனால் அவர்களின் பெரும்பாலான தாய்நாடுகள் அவ்வாறு கோரவில்லை.

இப்போது குர்து இனத்தவர்கள் துருக்கியின் ராணுவ அடக்குமுறையை எதிர்நோக்கியுள்ளனர். தனது எல்லையைப்பாதுகாக்க வட கிழக்கு சிரியாவுக்குள் 32 கிலோ மீட்டர் (20 மைல்) நீளத்துக்கு ``பாதுகாப்பு மண்டலம்'' அமைக்கவும், 2 மில்லியன் வரையிலான சிரிய அகதிகளை மறுகுடியமர்வு செய்யவும் துருக்கி விரும்புகிறது. ``என்ன நடந்தாலும்'' தங்கள் எல்லைகளைப் பாதுகாக்கப் போவதாக எஸ்.டி.எப். கூறுகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகக் கடுமையான போரில் பெறப்பட்ட பகுதிகள் தற்போது ஆபத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

ரஷியாவின் பின்புலத்தைக் கொண்டிருக்கும் சிரியா அரசாங்கம், சிரியா முழுவதையும் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப் போவதாக உறுதியாகக் கூறிவருகிறது

*குர்துகளை துருக்கி ஏன் அச்சுறுத்தலாகப் பார்க்கிறது?*

துருக்கி அரசுக்கும், மக்கள் தொகையில் 15 முதல் 20 சதவீதம் வரை உள்ள அந்த நாட்டு குத்துகளுக்கும் இடையில் நீண்ட காலமாக, ஆழமான பகை உள்ளது.

பல தலைமுறைகளாக துருக்கிய அதிகார வர்க்கத்தினரால் குர்து மக்கள் மோசமாக நடத்தப்பட்டு வந்துள்ளனர். 1920கள் மற்றும் 1930களில் ஏற்பட்ட புரட்சிகளைத் தொடர்ந்து, குர்து மக்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டனர். குர்து பெயர்கள், ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. குர்து மொழி பயன்பாடு கட்டுப்படுத்தப்பட்டது. குர்து என்ற இனம் இருந்தது என்பதை மறுக்கப்பட்டது. அந்த மக்கள் ``மலைப் பகுதி துருக்கியர்'' எனக் குறிப்பிடப்பட்டனர்.

1978-ல் அப்துல்லா ஒகேலன் பி.கே.கே.-வை உருவாக்கினார். துருக்கி நாட்டுக்குள் சுதந்திரமான அரசு தேவை என அவர் அழைப்பு விடுத்தார். ஆறு ஆண்டுகள் கழித்து, அந்தக் குழு ஆயுதப் போராட்டத்தில் இறங்கியது. அப்போது 40,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல நூறாயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

1990களில் பி.கே.கே., சுதந்திரம் என்ற தனது கோரிக்கையைத் திரும்பப் பெற்றது. அதற்குப் பதிலாகக் கலாச்சார மற்றும் அரசியல் தன்னாட்சி தேவை எனக் கோரியது. ஆனால் அதற்காகத் தொடர்ந்து போராடியது. 2013 ஆம் ஆண்டில் ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்றதை அடுத்து, போர் நிறுத்தம் செய்ய உடன்பாடு ஏற்பட்டது.

சிரிய எல்லை அருகே குர்திஷ்கள் அதிகம் வாழும் சுருக் -நகரில் 33 இளம் போராளிகள் உயிரிழப்புக்குக் காரணமாக 2015 ஜூலையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலைத் தொடர்ந்து போர்நிறுத்த உடன்பாடு முடிவுக்கு வந்தது. ஐ.எஸ். குழுவினர் அந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. துருக்கி அதிகார வர்க்கத்தினர் கூட்டு சதியில் ஈடுபட்டுத் தாக்குதலை நடத்தியதாகக் கூறி, பி.கே.கே. குழுவினர் துருக்கிய ராணுவத்தினர் மற்றும் காவல் துறையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதைத் தொடர்ந்து பி.கே.கே. மற்றும் ஐ.எஸ்.களுக்கு எதிராக ``பயங்கரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த போர்'' என்ற பெயரில் துருக்கி அரசாங்கம் தாக்குதலைத் தொடங்கியது.

அப்பாதிருந்து, தென் கிழக்கு துருக்கியில் - பல்லாயிரம் பேர் - நூற்றுக்கணக்கான மக்களும் இதில் அடங்குவர் - கொல்லப்பட்டுள்ளனர்

ஆகஸ்ட் 2016ல் இருந்து வடக்கு சிரியா பகுதியில் ராணுவத்தினர் இருப்பதைத் துருக்கி உறுதி செய்து வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான சிரியா கலகப் படையினருக்கு ஆதரவாக தமது படைகள் மற்றும் ராணுவ டாங்குகளை அனுப்பியதிலிருந்து அதைப் பராமரித்து வருகிறது. எல்லையில் உள்ள ஜராப்ளஸ் என்ற முக்கிய நகரை அந்தப் படைகள் கைப்பற்றின. மக்கள் விடுதலைப் பிரிவினரின் தலைமையிலான எஸ்.டி.எப். பிரிவினர் அந்த எல்லையைக் கைப்பற்றி, மேற்கில் குர்திஷ்களின் ஆப்ரின் பகுதியுடன் இணைப்பதைத் தடுக்கும் வகையில் இந்த நகரம் கைப்பற்றப் பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டில் ஆப்ரினில் இருந்து மக்கள் விடுதலைப் பிரிவினரை வெளியேற்ற சிரியா கலகப்படையினருடன் கூட்டுச் சேர்ந்து துருக்கி ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். ஏராளமான பொது மக்கள் இதில் உயிரிழந்தனர். பல நூறு பேர் இடம் பெயர்ந்தனர்.

மக்கள் விடுதலைப் பிரிவும், பி.ஒய்.டி. பிரிவும் பி.கே.கே.வின் துணை அமைப்புகள் என்றும், ஆயுதப் போராட்டம் மூலம் பிரிவினையை ஆதரிப்பவை என்றும், அழிக்கப்பட வேண்டிய பயங்கரவாத அமைப்புகள் என்றும் துருக்கி அரசாங்கம் கூறுகிறது.

சிரியாவின் குர்து மக்கள் விரும்புவது என்ன?

சிரியாவின் மக்கள் தொகையில் குர்து இனத்தவர்கள் 7 முதல் 10 சதவீதம் வரை உள்ளனர். 2011ல் அதிபர் பஷார் அல்-ஆசாத் -க்கு எதிராக புரட்சி உருவானதற்கு முன்னதாக, பெரும்பாலானவர்கள் டமாஸ்கஸ் மற்றும் அலெப்போ நகர்களிலும், தொடர்ச்சியான பகுதியாக அல்லாத கொபானேவை சுற்றிய பகுதிகளிலும், குவாமிஷ்லி நகரின் வடகிழக்குப் பகுதிகளிலும் வாழ்ந்து வந்தனர்.

சிரியாவின் குர்து இன மக்கள் நீண்டகாலமாகவே அடக்கப்பட்டு, அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தனர். 1960களில் இருந்து 300,000 பேருக்கு மேல் குடியுரிமை மறுக்கப்பட்டு வந்தனர். குர்திஷ் பகுதிகளை ``அரபு மயமாக்கும்'' முயற்சியாக, குர்திஷ்களின் நிலங்களைப் பறிமுதல் செய்து அரபு மக்களுக்கு வழங்கப்பட்டது.

புரட்சி பின்னர் உள்நாட்டுப் போராக உருவெடுத்தபோது, அப்போது பிரதானமாக இருந்த குர்திஷ் கட்சிகள் வெளிப்படையாகச் சார்பு நிலை எடுப்பதைத் தவிர்த்தன. 2012 மத்தியில், வேறு பகுதிகளில் கலகக்காரர்களைச் சமாளிக்க வேண்டியிருந்ததால் அரசுப் படைகள் திரும்பப்பெறப்பட்டநிலையில், குர்திஷ் குழுக்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டன.

ஜனவரி 2014-ல் குர்திஷ் கட்சிகள் - செல்வாக்கு மிகுந்த ஜனநாயக ஐக்கிய கட்சி (பி.ஒய்.டி.) உள்பட - ஆப்ரின், கொபானே மற்றும் ஜாஜிரா என்ற மூன்று ``சிறு பகுதிகளை'' தங்களுடைய ``தன்னாட்சி நிர்வாகங்களாக'' உருவாக்குவதாக அறிவித்தன.

மார்ச் 2016ல் ``கூட்டாட்சி அமைப்பு'' உருவாக்கப்படுவதாக அவை அறிவித்தன. ஐ.எஸ்.களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட அரபு மற்றும் துருக்கிய பகுதிகள் இதில் பிரதானமாக இருந்தன.

இந்த அறிவிப்பை சிரியா அரசாங்கமும், சிரிய எதிர்க்கட்சிகளும், துருக்கி மற்றும் அமெரிக்காவும் நிராகரித்தன.

தாங்கள் சுதந்திரம் கோரவில்லை என்று பி.ஒய்.டி. கூறுகிறது. ஆனால் சிரியாவில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான எந்தவொரு அரசியல் தீர்வு உருவாக்கப்பட்டாலும், குர்திஷ் மக்களின் உரிமைகளுக்கும், குர்திஷ் தன்னாட்சிக்கும் சட்ட பூர்வ உத்தரவாதம் அளிப்பதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

பேச்சுவார்த்தை மூலமாகவோ அல்லது ராணுவத்தின் மூலமாகவோ சிரியாவின் எல்லையில் ``ஒவ்வொரு அங்குலத்தையும்'' மீண்டும் கைப்பற்றுவோம் என்று அதிபர் ஆசாத் உறுதி தெரிவித்துள்ளார். குர்திஷ்களின் தன்னாட்சி கோரிக்கையை அவருடைய அரசு நிராகரித்துள்ளது. ``சிரியாவில் யாரும் தனிப்பட்ட அமைப்புகள் அல்லது கூட்டாட்சி பற்றிய பேச்சுகளை ஏற்க மாட்டார்கள்'' என்று அவர் கூறியுள்ளார்.

இராக்கில் உள்ள குர்து மக்கள் சுதந்திரம் பெறுவார்களா?

இராக்கிய மக்கள் தொகையில் குர்து மக்கள் 15 முதல் 20 சதவீதம் வரை உள்ளனர். அருகில் உள்ள நாடுகளில் வாழும் குர்து மக்களைவிட, இவர்கள் வரலாற்றுப் பூர்வமாக அதிக அளவில் தேசிய உரிமைகளை அனுபவித்து வருகின்றனர். ஆனால் கொடூரமான அடக்குமுறைகளுக்கும் ஆளாகியுள்ளனர்.

இராக்கில் தன்னாட்சி கேட்டுப் போராடுவதற்காக, 1946ல் முஸ்தபா பர்ஜானி என்பவர் குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியை (கே.டி.பி.) உருவாக்கினார். ஆனால் 1961ல் தான் முழுமையான ஆயுதப் போராட்டமாக அதை மாற்றினார்.

1970களின் பிற்பகுதியில் குர்திஷ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் அரசு அரேபியர்களைக் குடியமர்த்தத் தொடங்கியது. குறிப்பாக எண்ணெய் வளம் மிகுந்த கிர்குக் பகுதிகளைச் சுற்றி, குத்துகளைக் கட்டாயமாக வெளியேற்றிவிட்டு, இந்தக் குடியேற்றம் நடைபெற்றது.

ஈரான் - இராக் போர் நடைபெற்ற 1980களில் இந்தக் கொள்கை தீவிரமானது. அப்போது குர்து மக்கள் இஸ்லாமியக் குடியரசை ஆதரித்தனர். 1988ல் குர்துகள் மீது சதாம் உசேன் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்தார். ஹலாப்ஜாவில் ரசாயன தாக்குதல் நடந்ததும் அதில் அடங்கும்.

1991 வளைகுடா போரில் இராக் தோற்கடிக்கப்பட்ட போது, பர்ஜானியின் மகன் மஸ்ஸோவுத்தும், போட்டியாக இருந்த குர்திஸ்தான் தேசபக்தி யூனியனை (பி.யூ.கே.) சேர்ந்த ஜலால் டலபானியும் இணைந்து குர்திஷ் கலகத்தை ஏற்படுத்தினர். அவர்களின் தீவிரமான செயல்பாடு காரணமாக, வடக்கில் விமானங்கள் பறக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் தடை விதிக்கும் நிலை ஏற்பட்டது. அதனால் குர்துகள் சுய ஆட்சி சுதந்திரத்தை அனுபவித்தனர். கே.டி.பி.யும், பி.யூ.கே.வும் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டன. ஆனால் பதற்றங்கள் உருவானதால் 1994ல் அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட போர் நான்கு ஆண்டுகள் நீடித்தது.

2003ல் சதாம் ஆட்சியைக் கவிழ்த்த அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்பில் ஒத்துழைப்பு கொடுத்து, டாஹுக், இர்பில் மற்றும் சுலைமானியா மாகாணங்களை நிர்வகிக்க இரண்டு ஆண்டுகள் கழித்து குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தை (கே.ஆர்.ஜி.) உருவாக்கின.

மஸ்ஸோவுத் பர்ஜானி அந்தப் பிராந்தியத்தின் அதிபராக நியமிக்கப்பட்டார். இராக்கின் அரபு-அல்லாத முதலாவது மாகாணத் தலைவராக ஜலால் டலபானி பொறுப்பேற்றார்.

செப்டம்பர் 2017-ல் குர்திஸ்தான் பகுதியிலும், 2014ல் பெஷ்மெர்காவினரால் கைப்பற்றப்பட்ட சர்ச்சைக்குரிய கிர்குக் உள்ளிட்ட பகுதிகளிலும், சுதந்திரம் குறித்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதற்கு இராக்கின் மத்திய ஆட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அது சட்டவிரோதம் என்று அந்த அரசு கூறியது.

வாக்களித்த 3.3 மில்லியன் மக்களில் 90 சதவீதத்துக்கும் மேலானவர்கள், பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். பாக்தாத் உடன் பேச்சு நடத்தத் தங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது என்று கே.ஆர்.ஜி. அதிகாரிகள் கூறினர். ஆனால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி கூறினார்.

அதற்கடுத்த மாதத்தில், குர்துகள் வசமிருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளை, இராக் அரசின் ஆதரவுப் படைகள் மீண்டும் வசப்படுத்தின. சொந்த அரசு உருவாக்க வேண்டும் என்ற குர்திஷ் உயர் விருப்பங்களுக்கு, எண்ணெய் வளம் மிக்க கிர்குக் நகரம் மற்றும் அதன் வருவாய் இழப்பு பெரிய பின்னடைவாக அமைந்தது.

தன்னுடைய முயற்சி தலைகீழ் பலனைத் தந்துவிட்ட நிலையில், திரு. பர்ஜானி குர்திஸ்தான் பிராந்தியத்தின் அதிபர் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். ஆனால் பிரதான கட்சிகளுக்கு இடையில் ஒப்புதலான கருத்துகள் ஏற்படாததால் ஜூன் 2019 வரையில் அந்தப் பதவி காலியாகவே இருந்தது. அப்போது அவருடைய அண்ணன் மகன் நெச்சிர்வான் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார்.

Thursday, 12 December 2019

போதைப் பொருள் விழிப்புணர்வு செயலமர்வு-2019


போதைப் பொருள் விழிப்புணர்வு தொடர்பான கருத்தரங்கு கடந்த தினம் (10.12.2019) செவ்வாய்கிழமை காலை 10 மணியளவில் யாழ்.பல்கலைக்கழக ஊடகத்துறை ஆய்வு கூடத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வானது நிகழ்ச்சி  அதிகாரியாகிய ரஹீம் மற்றும் உதவி நிகழ்ச்சி  அதிகாரி கோடீஸ்வரன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக ஊடகத் துறை விரிவுரையாளர்கள் மற்றும் ஊடகத் துறை மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் போதைப் பொருள் என்பது யாது? போதைப் பொருளிற்கு எவ்வாறு அடிமையாகின்றனர் எனவும் போதைப் பொருள் பாவனையால் ஏற்படக் கூடிய பாதகமான விளைவுகள் என்பன இந் நிகழ்வின் போது கூறப்பட்டது.

இலங்கைக்கு போதைப் பொருட்களினால் கிடைக்கின்ற வருமானம் குறைவாக உள்ள போதிலும் விநியோகிப்பது கவலையான ஒரு விடயமாக உள்ளது. இதனால் பாமர மக்கள்  அதிகம் பாதிக்கப்படுவதுடன் அதிகளவிலான பணத்தை போதைப் பொருளிற்கு செலவிடுகின்றனர் எனவும் விளம்பரங்கள் போதைப் பொருள் பாவனையை அதிகம் தூண்டுகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் இப் போதைப் பொருள் பாவனையை தடுக்க ஊடகவியலாளர்கள் முன்வர வேண்டும் எனவும் இது தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில்  ஏற்படுத்த வேண்டியது ஊடகவியலாளர்களின் கடமை எனவும் குறிப்பிட்டார்.

Friday, 6 December 2019

நினைவுப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும்.

நினைவுப் பிரார்த்தனையும் அஞ்சலி நிகழ்வும்.

மூத்த ஊடகவியலாளரான அமரர் பி.எஸ். பெருமாள் அவர்களின் 31ம் நாள் நினைவுப் பிரார்த்னையும் அஞ்சலி நிகழ்வும் இன்று 5.12.2019 வியாழக்கிழமை ராஜா சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெற்றது. 

இவ் நினைவுப் பிரார்த்தனையானது  ஜோசப் பாலா அவர்களின் தலைமையில் இடம்பெற்றதுடன் இவ் பிரார்த்தனையில் அன்னாரின் குடும்பத்தினர் ஊடகவியலாளர்கள் யாழ்.பல்லைக்கழக ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராம் ஊடக விரிவுரையாளர்கள் ஊடக மாணவர்கள் அன்னாரின் நண்பர்கள் உறவினர்கள் எனப்பலரும் இவ் நினைவுப் பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன் அன்னாரின் ஆத்ம சாந்திக்கானஅஞ்சலியும் செலுத்தப்பட்டது .

ஊடகத்துறையில் பலதரப்பட்ட பணிகளை ஆற்றி வெவ்வேறுபட்ட அடைமொழிகளையும் பட்டங்ளையும் பெற்ற பெருமாள் அவர்களது ஊடகத்துறை சார்ந்த பணிகள் அவரது செயற்பாடுகள் மற்றும் அன்னாருடனான அனுபவங்கள்   தொடர்பான ஊடகவியலாளரது கருத்துக்களும் முன்வைக்கப்பட்டது. 

அன்னாரது நினைவுகளை கூறும் வகையில் பெருமாளின் பதிவுகள் எனும் நூலினை ஈஸ்வரிபெருமாள் அவர்களால் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்டது. அன்னாரின் உயிர் உடலை விட்டு பிரிந்திருந்தாலும் ஊடகத்துறை சார்ந்த அவரது பணி என்றுமே மறைவதில்லை.

Thursday, 5 December 2019

சுகாதாரமான நகரத்தைக் கட்டியெழுப்புதல்

சுகாதாரமான நகரத்தைக் கட்டியெழுப்புதல் தொடர்பான ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை.

உலக சுகாதார ஸ்தாபன இலங்கை தலைமை காரியாலயம், வடமாகாண சுகாதார திணைக்களம் மற்றும் சமுதாய குடும்ப மருத்துவ துறை, மருத்துவ பீடம் யாழ்ப்பாணம் போன்றவற்றின் ஏற்பாட்டின் மூலம் "ஆரோக்கியமான யாழ் நகரை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம்" என்ற தொணிப்பொருளில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப்பட்டறை ஒன்று 03.12.2019 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00  மணி முதல் மதியம் 3.00 மணி வரை வலம்புரி விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.


இவ் நிகழ்வினை 10.00 மணியளவில் மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் குமரேந்திரன் அவர்கள் ஆரம்பித்து வைத்ததுடன், அவருடைய கருத்தினையும் முன்வைத்தார். அவையாவது, ஓர் சுகாதாரமான வாழ்வினை வாழவும், ஆரோக்கியமான நகரை கட்டியெழுப்பவும் எவை செய்ய வேண்டும் . அதனை எவ்வாறு மக்களிடம் போய் சேர்ப்பது  இதை செய்வது ஊடகவியலாளர்களான உங்களின் கடமை என்றும்  தனது கருத்தினை அழுத்தமாக பதித்திருந்தார். 

இவரைத் தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலையின்   சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் துவாரகா அவர்கள் மாசடைந்த, அடைகின்ற சூழல் சார் புகைப்படங்களை திரையிட்டு  எமது யாழ் நகரம் எவ்வாறு செல்கிறது இதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் குறிப்பிட்டார். ஆகவே திண்மக்கழிவுகளை முறையாக      அகற்ற வேண்டும் எனவும் ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து கொண்டாலே முழு நகரையும் சுகாதாரமான ஆரோக்கியமான நகரமாக கட்டியெழுப்ப முடியும் என்ற கருத்து இவரால் முன்வைக்கப்பட்டது.

மற்றுமொரு மருத்துவ பீட விரிவுரையாளர் டாக்டர் குமரன் அவர்கள் ஒரு சுகநல வைத்தியசாலை எனும் முகப்பில் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். இவ் வைத்தியசாலை காணப்பட்டால் பல  ஆரோக்கியமான சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும் எனவும் கலந்துரையாடல் மூலம் பல்வேறு வழிகளை குறிப்பிட்டு இருந்தார்.

இவ்வாறு ஓர் ஆரோக்கியமான நகரத்தை கட்டியெழுப்ப நாம் என்ன செய்ய வேண்டும் அதற்கான வழிகாட்டுதல் செயலமர்வாக இது அமைந்திருந்தது.
இந் நிகழ்விற்கு ஊடகவியலாளர்கள்,யாழ்  பல்கலைக்கழக ஊடகத்துறை 2ஆம் வருட மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tuesday, 3 December 2019

கனலி சஞ்சிகை வெளியீடு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மூன்றாம் வருட மாணவர்களின் கனலி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு 02.11.2019 அன்று யாழ்.பல்கலைக்கழக நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி அவர்களும் சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி கலாநிதி.கே.சுதாகர் அவர்களும் கலந்துகொண்டனர்.

கனலி சஞ்சிகையின் முதற் பிரதியை சிரேஷ்ட ஊடகவியலாளர் இராதேயன் அவர்கள் வெளியிட்டு வைக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி பேராசிரியர் க.கந்தசாமி அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Monday, 2 December 2019

"கனலி"மாணவர் சஞ்சிகை வெளியீடு - 2019 

யாழ்.பல்கலைக்கழகத்தில்   "கனலி"மாணவர் சஞ்சிகை வெளியீடு - 2019 

யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின்  3ஆம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் 'கனலி' மாணவர் சஞ்சிகை வெளியீடு நிகழ்வானது  யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் 02.12.2019 (இன்று ) பி.ப 2மணி தொடக்கம் 4மணி வரை யாழ் பல்கலைக்கழக நூலகக் கலையரங்கில் இடம்பெறவுள்ளது. 


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சிரேஷ்ட பேராசிரியர் க. கந்தசாமி (யாழ் பல்கலைக்கழக தகுதி வாய்ந்த அதிகாரி) அவர்களும் சிறப்பு விருந்தினராக  கலாநிதி கே.சுதாகர் ( பீடாதிபதி , கலைப்பீடம் , யாழ் பல்கலைக்கழகம் ) அவர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.


"நல்லவை  சுடர்விட தீயவை பொசுங்கிட" எனும் தொனிப்பொருளில் ஊடகக் கற்கைகள் துறையின் மூன்றாம் வருட  மாணவர்களால் உருவாக்கப்பட்ட  கனலி சஞ்சிகையானது முழுக்க முழுக்க மாணவர்களின் ஆக்கங்களை தாங்கியே வெளிவருகின்றது.  மாணவர்களின் அறிக்கையிடல் நுட்பங்களை செய்முறை ரீதியாக வெளிக்கொணரும் வகையில் இச்சஞ்சிகை ஆக்கம் பெற்றுள்ளது. 

யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள்
இன்று இடம்பெறவுள்ள இச்சஞ்சிகை வெளியீட்டு  நிகழ்வுக்கு அனைத்து மாணவர்களையும் சமூக ஆர்வலர்களையும் அன்புடன் அழைத்து நிற்கின்றனர்.

டெங்கு

டெங்கு நோயானது ஈடிஸ் என்னும் கொசுவினால் பரவக் கூடிய ஒரு வைரஸ் கிருமியால்  டெங்கு நோய் ஏற்படுகிறது. இந்த வகைக் கொசு மற்றைய கொசுக்களைப் போலல்லாமல் பகல் வேளைகளில் தான் கடிக்கின்றது.இதனால் தான் அதிகம் இவ் நோய் பரவுகிறது.

 உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இவ் நோயினால் பாதிக்கப்படுகின்றனர். ஆண்டுதோறும் 24,000 பேர் இதனால் இறக்கின்றனர். ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதி, தென்கிழக்கு ஆசியா மற்றும் பசுபிக் பகுதிகளில் உள்ள சுமார் 100 நாடுகளில் இவ்  காணப்படுகிறது. ஆகவே எமது நாட்டில் டெங்கு காய்ச்சின் தாக்கம் குறித்து பார்ப்போம்.

இங்கு கடந்த வருடத்தில் ஒரளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்த டெங்கு காய்ச்சல் தாக்கமானது தற்போது தீவிரமாக பரவத் தொடங்கியுள்ளது. நாட்டில் டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்படுவோரின் எண்ணிக்கை இவ் வருடத்தில் அதிகமாகி உள்ளது. என சுகாதார அமைச்சு அதிகாரிகள் கூறுகின்றனர். இவ் வருடத்தின் முதல் நான்கு மாத காலத்தில் இன் நோயினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது கடந்த வருடம் 
முழுவதுமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகமானது என்று சுகாதார அமைச்சின் அறிக்கை  ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே இவ் வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கம் மோசமாக அதிகரித்து செல்லக் கூடிய ஆபத்தான நிலமையே காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து யூலை மாதம் வரை டெங்கு நோயால் 40 பேர்  மரணம் அடைந்துள்ளதுடன் 27,088 பேர் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளனர். 

நாட்டில் கொழுப்பு, கம்பஹா, காலி, அம்பாந்தோட்டை, கண்டி, களுத்துறை, யாழ்ப்பாணம், திருகோணமலை ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தாக்கம் காணப்பட்டது. தற்போது யாழ். மாவட்டத்தில்  தான் டெங்கு நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது இம் மாதம் 20ஆம் திதகி வரை 736 டெங்கு நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ் வருடம் அதிகம் அதிகரித்து உள்ளது என பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் டெங்கு நோயின் தாக்கம் தீவிரமடைவதும், பின்னர் நோய்த் தாக்கம் தணிந்து போவதும் வழமையாகும். டெங்கு காய்ச்சல் தீவிரமாகும் போது நாட்டில் விழிப்புணர்வு அதிகரிப்பதும், நோய் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் விழிப்புணர்வு அலட்சியப்படுத்தப்படுவதும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவ்வாறான அலட்சியம் காரணமாகவே ஒவ்வொரு வருடமும் குறித்த காலப் பகுதியில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கின்றது. வருடம்தோறும் குறிப்பிட்ட காலப்பகுதியில் டெங்கு வேகமாக பரவுவதற்குக் காரணம் மழை ஆகும். ஆகவே தான் தற்காலத்தில் அதிகமாக மழை பெய்வதால் பல இடங்களில் நீர் தேங்கி நிற்பதனால் நுளம்புகள் பெருகி டெங்கு காய்ச்சலும் அதிகமாக சமீப தினங்களில் அதிகமாக பரவி  வருகின்றது.

எனவே இவ் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றால் முடிந்தவரை எமது சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருகாதபடி பேணுதல் வேண்டும். நுளம்புகளில் இருந்து முழுமையான பாதுகாப்புப் பெறுவது அவசியமானதாகும்.

வாக்களித்தலின் முக்கியத்துவம்

வாக்களிப்பு ஜனநாயக உரிமை
வாக்களித்தல் ஒவ்வொருவரதும் கடமை

      வாக்குரிமை என்பது பொது மற்றும் அரசியல் தேர்வுகளில் வாக்களிக்கும் உரிமை ஆகும். வாக்குரிமை தகுதி பெற்ற குடிமகன்களுக்கும், 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றம்,  சட்டமன்றம், நகராட்சி மன்றம்,  உள்ளூராட்சி மன்றம் ஆகியவற்றுக்கான உறுபிபனர்களைத் தேர்ந்தெடுப்பதற்க்கு தேர்தல்கள் நடைபெறுகின்றன. நாட்டின் குடிமக்கள் தங்கள் வாக்குகளை வழங்கிப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இவ்வாறு வாக்களிப்பதற்கு குடிமக்களுக்கு உள்ள உரிமையை வாக்குரிமை என்கிறோம்.

இத்தகைய வாக்களிப்பின் முக்கியத்துவம் தொடர்பாக அறிந்திருப்பது மிகவும் அவசியமானதாகும். அந்தவகையில் இது தொடர்பான கருத்து.


வாக்களித்தல் என்பது எங்களுக்காக நாங்கள் செய்ய வேண்டிய கடமை. நாங்கள் நேசிக்கும் நபர்களுக்காகவும், எங்கள் நாட்டின் வளர்ச்சிக்காகவும், எங்களது நலனுக்காகவும் நாங்கள் வாக்களிக்கவில்லை என்றால் எங்களுக்காக யார் வாக்களிப்பது ?

மக்களால் மக்களுக்காக நடாத்தப்படுபவையே தேர்தலும் அரசாங்கமும். ஆதலால், வெறும் பார்வையாளர்களாக இருந்து குறை மட்டும் சொல்லாமல் நல்லாட்சியை பெறுவதற்கு நாங்களே களம் இறங்க வேண்டிய காலம்.

இன்று அனைத்தையும் விரல் நுனிக்குள் கொண்டு வந்து விட்டது இணையம். ஆகவே உங்களுக்கு இந்த நடைமுறைகள்  புரியவில்லை என்றால் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் நண்பர்களிடம், குடும்பத்தாரிடம் கேளுங்கள் , செய்தி கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அறிந்து தெரிந்து கொண்டு உரிய செல்லுபடியாகும் வாக்கினை போடவும்.

தற்காலம் இளைஞர்கள் பலரும் வாக்களிப்பதில் ஆர்வம் இல்லாமல் உள்ளனர். ஆனால் இளமையை மட்டுமில்லாமல் உங்கள் எதிர்காலத்தையும் சேர்த்து யோசியுங்கள். வாக்களிப்பது உங்களது ஐனநாயக கடமை. நாங்கள் எடுக்கும் முடிவு எங்கள் எதிர்கால அரசின் மூலம் வெளிப்படும். ஆகவே இளைஞர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். 

இன்றைய காலகட்டத்தில் பல நாடுகளில் அந்நாட்டு அரசாங்கத்தைத் தேர்தெடுப்பதற்கான வாய்ப்பு அந்நாட்டு மக்களுக்கு கிடைக்கவில்லை. காரணம் அவர்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை. நமது முன்னோர்கள் போராடி பெற்ற உரிமை தான் வாக்குரிமை. இந்த உரிமைகளை நாம் பாராட்டி நாமாக முன்வந்து நம் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவோம்.

  எனவே இந் நாட்டின் பிரஜை என்ற வகையில் எமக்கு இருக்கும் உரிமையை சரிவர  செய்து நம் நாட்டின் நல்லாட்சிக்கு உறுதுணையாக இருப்போம்.

                         

 ஈரான்🇮🇷- இலங்கை🇱🇰 நட்புறவு திரைப்பட விழா   

யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஈரான்- இலங்கை நட்புறவு திரைப்பட விழா   

யாழ் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையின் ஏற்பாட்டில் ஈரானிய பண்பாட்டு நிலையத்தின் அனுசரணையுடன் ஊடகக் கற்கைகள் துறைத் தலைவர் கலாநிதி சி.ரகுராம் தலைமையில் நவம்பர் மாதம் 8ம் 9ம் திகதிகளில் யாழ் பல்கலைக்கழக கைலாசபதி  கலையரங்கில் இடம்பெற்றது. 
நவம்பர் 8ம் திகதி  காலை 10மணியளவில் கலைப்பீட பீடாதிபதி  கலாநிதி கே. சுதாகர்  நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இதனைத் தொடர்ந்து  ஈரானிய பண்பாட்டு நிலையத்தின்  அலுவலர் மகாகமகே அவர்களும், சிரேஸ்ட எழுத்தாளர் யேசுராஜா  அவர்களும் உரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து  சர்வதேச விருதுபெற்ற "ராணாவின் மௌனம் " என்ற திரைப்படம் திரையிடப்பட்டது. திரைப்பட நிறைவில் திரைப்படம் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.
8ம் திகதி மாலை 3 மணியளவில்            "வீ காவ் எ கெஸ்ற் " என்ற திரைப்படமும் திரையிடப்பட்டது.
9ம் திகதி காலை 10மணியளவில் "கொக்கற்ரி" என்ற திரைப்படமும் மாலை 3மணியளவில் " சீசன் ஒவ் நர்கீஸ்"  என்ற திரைப்படமும் திரையிடப்பட்டது. ஒவ்வொரு திரைப்படத்தின் இறுதியிலும் அவை பற்றிய கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
இத்திரைப்பட விழாவில் பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் ,பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், திரைப்பட ஆர்வலர்கள்  என்போர் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பாக்.வீரர்கள் 10 பேருக்கு கொரோனா; சோகத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் 10 வீரர்களுக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்...